News

அனைத்து பாடசாலைகளும் 10ம் திகதி ஆரம்பம்

அனைத்து பாடசாலைகளும் 10ம் திகதி ஆரம்பம் : சுற்றுநிருபத்துக்கு மாறாக அதிபர்கள் சிலர் செயற்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..!


அதன்படி 200 பிள்ளைகளை விட குறைந்த எண்ணிக்கையுடைய பிள்ளைகள் பயிலும் சகல பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 முதல் திறக்கப்படும். அந்தப் பாடசாலைகளில் உள்ள சகல வகுப்புகளும் ஆரம்பமாகும். அதேவேளை 200 பிள்ளைகளை விட கூடிய பிள்ளைகளைக்கொண்ட பாடசாலைகளில் தரம் 5,10,11,12,13 ஆகிய 5 வகையான வகுப்புகளுக்கு எல்லா நாட்களும் பாடசாலை நடைபெறும்.
ஏனைய வகுப்புக்களுக்கு நாள்ரீதியில் வகுப்புகள் நடைபெறும். அதாவது நாளொன்றுக்கு 7 வகையான வகுப்புகள் நடைபெறும். அந்த வகுப்பு மாணவர்கள் மாத்திரமே சமுகமளிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கட்கிழமை தரம் 1 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.
அதேபோன்று செவ்வாய்க்கிழமை தரம் 2 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். புதன்கிழமை தரம் 3மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரம் 4 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். மேற்கூறப்பட்டவாறு பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பமாகும். அதாவது வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் மாத்திரம் பாடசாலைக்கு மாணவர்கள் சமுகமளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி உளளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில் மிகவும் கவனமாக காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றாக நாட்டை விட்டு நீங்கியதும் காலப்போக்கில் வழமையான நடைமுறைக்கு கொண்டு வரப்படும். நேரத்தைப் பொறுத்த வரை தரம் 10,11,12,13 வகுப்புகளுக்கு காலை 7.30 முதல் மாலை 3.30 வரையும் ஏனைய வகுப்புகளுக்கு வழமையான நேரப்படியும் நடைபெறும்.
இது விடயம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதற்கு காரணங்களிருக்கின்றன. கல்வியமைச்சு சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைவாக இத்தகைய ஆட்குறைப்பு செயற்பாடுகளைக் கையாள்கிறது. அதற்காக அவ்வப்போது சுற்றுநிருபங்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியும் வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அச்சுற்றுநிருபத்தை பலர் பின்பற்ற, சிலர் உதாசீனம் செய்வதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. உதாரணமாக இந்த வாரம் தரம் 11, 12 ,13ஆகிய வகுப்பு மாணவர்களும் அதற்குரிய ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும் என கல்வியமைச்சின் சுற்றுநிருபம் தெளிவாக சொல்லியிருந்தும், சில அதிபர்கள் தன்னிச்சையாக சகல ஆசிரியர்களும் வரவேண்டும் என்று உத்தரவிட்டு வரவழைத்துள்ளனர்.
ஆசிரியர் நலன் பேணுகின்ற ஆசிரிய தொழிற்சங்கமொன்று இதுதொடர்பாக பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரே அறிவித்தலொன்றையும் விடுத்திருந்தது. எனினும் அமைச்சின் சுற்றுநிருபத்தையும் பொருட்படுத்தாது, சங்க அறிவித்தலையும் கவனிக்காது தான்தோன்றித்தனமாக சில அதிபர்கள் செயற்பட்டதை பல ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இத்தகைய முரண்பாடான போக்கு பாடசாலைகளுக்கிடையே, அதிபர் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளன. அத்தகைய முரண்பாடுகளை அந்தந்த மாகாண வலயக்கல்வி அதிகாரிகள் கவனத்திற்கெடுத்து அனைவருக்கும் ஒரே சீரான நடைமுறையைப் பின்பற்ற ஆவன செய்ய வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். கொரோனா தொற்று ஏற்படுவதைத்தவிர்க்கும் உபாயமாகவே கல்வியமைச்சு இத்தகைய செயற்பாடுகளை மிகவும் கவனமாக படிப்படியாக செயற்படுத்தி வருகிறது. கொரோனா தவிர்ப்பு நடைமுறையை பாடசாலைகளில் எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பாகவும் கல்வியமைச்சு வழிகாட்டல் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாகவும் கல்வியமைச்சர் புதிய தகவலொன்றை கூறியுள்ளார். இப்பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதென்றும் ஆனால் வினாக்கட்டமைப்பில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தரம்5 மாணவர்கள் 4 மாத கால படிப்பை பெறவில்லையென்பதால் பின்வரும் சலுகையை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.அதனை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ளார். வழமையாக முதலாம் பத்திரம் 45நிமிடங்களுக்கு நடைபெறுவது வழமை. இம்முறை அதனை மேலும் 15நிமிடங்களுக்கு நீடித்து 1மணி நேரமாக நேர நீடிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2ஆம் பத்திரத்தில் 4 வினாத் தெரிவுகளுக்குப் பதிலாக 3 தெரிவு செய்தாலே போதும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச்மாதம் 13ஆம் திகதி அனைத்துப்பாடசாலைகளும் திடீரென மூடப்பட்டன. சுமார் ஆறு மாத கால நீண்ட விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி நாட்டிலுள்ள 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சகல பாடசாலைகளும் ஒரே தடவையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதற்கான நடைமுறை ஒழுங்குவிதிகளை கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்

No comments

Lanka Education. Powered by Blogger.