News

தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை: மாணவர்கள் மீதான உள இம்சைக்கு இனிமேலாவது முடிவு காணப்படுமா?


இலங்கைக்கு பொருந்தும் வகையில் சர்வதேச தரத்திற்கு அமைவாக பாடநெறிகளை நவீனமயப்படுத்துவது, பாடங்களின் எண்ணிக்கை மற்றும் பாடவிதானங்களின் தன்மை, கற்பித்தல் முறைமை தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டு மாற்றம் செய்யப்படுமெனத் தெரிகின்றது.
இதற்காக நாடளாவிய ரீதியில் அடுத்த மாதம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு மாற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.நாட்டின் பொருளாதார முறைமை , தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள், வர்த்தகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.
தற்போதைய கல்வி முறையூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நீக்கப்படுமா?
இந்த நிலையில், பொதுப்பரீட்சைகளிலும் கல்வியமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென கல்விச் சமூகம் எதிர்பார்க்கின்றது. பரீட்சைமையக் கல்வி என்ற ரீதியில்தான் கற்றல் நடவடிக்கைகள் தொடருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கடந்த காலங்களில் பல்வேறு விதமான எதிரலை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இப்பரீட்சை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பலவிதமான எதிர்மறைத் தாக்கங்களை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
இப்பரீட்சையானது இரு நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
1. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு ஒரு உதவித் தொகை வழங்குதல்.
2. பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வளமுள்ள நகரப் பாடசாலையில் இடஒதுக்கீடு செய்தல்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மொத்த மாணவர்களில் 10 வீதமானவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் வெட்டுப் புள்ளியும் அதிகரித்துச் செல்கிறது .
இந்த இரு நோக்கங்களும் இப்பரீட்சையினூடாக நிறைவேற்றப்படுகின்றனவா? என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். சமூகத்தில் இப்பரீட்சை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்பது மட்டும் உண்மையாகும். இப்பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபங்களை கல்வித் திணைக்களம் அமுல்படுத்த வேண்டும். சித்தியடைந்தோரைக் காட்சிப்படுத்துதல், ஆயிரக்கணக்கில் அறவிட்டு அன்பளிப்பு வழங்குதல் என்பவை நிறுத்தப்பட வேண்டும். ஏனைய தவறவிட்ட 90வீதமான பிள்ளைகளையிட்டு உளரீதியாகச் சிந்தித்தால் இது புரியும்.
இலங்கையிலுள்ள ஒரு பிரபலமான உளவள வைத்திய நிபுணர் ஒருவர் கருத்துரைக்கையில், 'இப்பரீட்சை கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் உளநோயாலும் மனஅழுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றர்கள். அதைவி ட பெற்றோர் பாதிக்கப்படுகின்றார்கள்' எனக் கூறியுள்ளார்.
அதை விட முக்கியமானதொன்றை அவர் கூறியுள்ளார். "அதாவது இப்பரீட்சையால் யார் இலாபமடைகின்றார்கள்? பரீட்சைக்கு முன்பு ஆசிரியர்களும், பரீட்சைக்குப் பின்பு வைத்தியர்களும் பலனடைகின்றார்கள் அல்லது இலாபமடைகின்றனர்" என்று வைத்தியர் கூறியுள்ளார்.
பரீட்சை என்ற சொல்லை வைத்து முதல் இரு வருடங்களும் (தரம்4, தரம்5)மாணவர்களின் பெற்றோரிடம் பெரும் பணம் சுருட்டப்படுகின்றது. இப்பரீட்சையில் சித்தியடைபவர்களில் பெரும்பாலானோர் வசதி கூடிய குடும்பப் பிள்ளைகள்.
மறுபுறத்தில் மாதமொன்றுக்கு 500 ரூபா புலமைப் பரிசில் தொகை போதுமானதா என்பதையிட்டு சிந்திக்க வேண்டும். பல தசாப்த காலத்திற்குப் பிறகு இத்தொகை இம்முறை 750ருபாவாக மாறியிருக்கிறது. புலமைப்பரிசிலை அவமானப்படுத்தும் தொகையாகவே இதனைப் பார்க்க வேண்டிள்ளது.
இத்துணை கடினமான பரீட்சையொன்றில் சித்தியடைவது சாதாரணமானதல்ல. அதனையும் எமது பிள்ளைகள் எதிர்கொண்டு சாதனை படைக்கிறார்கள். அதற்காக அந்த சிறுவயதில் அவர்கள் படுகின்ற துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாணவர் மத்தியில் இப்பரீட்சை விரக்தியான கலாசாரத்தைத் தோற்றுவித்து வருகின்றது.
பிரத்தியேக வகுப்பில் மாதமொன்றுக்கு ஒரு மாணவனுக்கு 1000 ரூபா வீதம் அறிவிட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் மாணவர் சித்தியடைந்ததும் ஆசிரியர்களுக்கு பாராட்டும் அன்பளிப்பும் வழங்கப்படுகின்றன.
அதேசமயம் பாடசாலையில் கற்பித்த ஆசிரியரா அல்லது ரியூசனில் கற்பித்த ஆசிரியரா வெற்றிக்கு உரிமை கோருவதென்பதிலும் முரண்பாடு ஏற்படுவதுண்டு. மாணவன் ஒருவன் சித்தியடைந்ததும்
பெற்றோர் மகிழ்ச்சியினால் மனமுவந்து சிறு அன்பளிப்பு வழங்குவதென்பது வேறு விடயம். ஆனால் ஆயிரக்கணக்கில் அறவிட்டு தங்கச்சங்கிலி, தங்கக் காப்பு வழங்குவதென்பது சிந்திக்க வேண்டிய விடயம். இதிலுள்ள வேடிக்ைக என்னவென்றால் சுற்றுநிருபத்தை அமுல்படுத்த வேண்டிய அதிபர்கள் கல்வி அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே இதனை வழங்குவதாகும். அவர்களுக்கும் ஒரு பொன்னாடை. இந்தக் கலாசாரம் தொடர்கிறது.
பாடசாலைகளில் நிதி அறிவிடுவது,புலமைப்பரிசில் சித்தி பெற்றவர்களின் படங்கள் காட்சிப்படுத்தல் கூடாது என்று கல்வியமைச்சு சுற்றுநிருபங்கள் கூறுகின்றன.ஆனால் அவை வெறும் சுற்றுநிருபங்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாகும்.
கல்வியமைச்சு இந்த விடயத்திலும் தலையிட்டு ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.
இலவசக் கல்வி என்று கூறி விட்டு இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது கண்டும் காணாமலிருப்பது எதிர்காலத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என பெற்றோர் அஞ்சுகின்றனர்.
பரீட்சையில் தவறி விட்ட மாணவர் சிலர் பாடசாலைக்குச் செல்ல மறுத்த சம்பவத்தை அண்மையில் பத்திரிகையில் அறியமுடிந்தது. பத்திரிகைகளில் ஆசிரிய தலையங்கம் கூட எழுதப்படும் நிலைக்கு இப்பரீட்சை வந்திருக்கிறதென்றால் இன்னமும் தாமதிக்க முடியாது என்ற செய்தியை இப்பரீட்சை உணர்த்தி நிற்கிறது.
இதனை உளவியலாளர்களும் கல்வியலாளர்களும் தொடர்ச்சியாக கூறி வருகின்ற இந்நிலையில், இன்னும் இதனை மாற்றியமைக்க முற்படாதது குறித்து விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
புத்திஜீவிகளையோ சிந்தனைவாதிகளையோ அடையாளப்படுத்தும் பரீட்சை இதுவல்ல என்பதை விளங்குதல் வேண்டும் .
உண்மையில் இத்தனை ஆண்டு கால இலங்கையின் கல்வி வரலாற்றின் அனுபவம் என்னவென்றால் புலமைப்பரிசில் பரீட்சையில் 10 வீதம் சித்தியடைந்த மாணவர்களில் 4 வீதத்தினர் மட்டுமே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தேர்வு அடைகின்றனர் .உயர்தரப் பரீட்சையில் அது 2 வீதமாக வீழ்ச்சி அடைகிறது .
இப்பரீட்சையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற பொறிமுறை பற்றி கல்வித்துறை சார்ந்தோர் சிந்திக்க வேண்டியது அவசியம்.
இப்பரீட்சையின் முதல் நோக்கத்திற்காக அதாவது வசதி குறைந்த மாணவர்களுக்கு உபகாரப் பணம் வழங்குவது என்பதற்காக ஒரு பரீட்சையும் பெரிய பாடசாலையில் பயில வேண்டுமென்பதற்காக பிறிதொரு பரீட்சையும் நடத்தப்படுவது பொருத்தமாக இருக்கும்.
ஆனால் ஒரு மாணவன் ஒரு பரீட்சைக்கு மாத்திரமே தோற்ற வேண்டும். இந்த இடத்தில் வசதி குறைந்த என்ற பிரிவினை மாணவர் மத்தியில் ஏற்றத்தாழ்வை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாதா என்ற வினா எழுகின்றது.
உண்மையில் மேற்படி பரீட்சையில் சித்தியடையத்தவறும் 90வீதமானோர் அடையும் உளத்தாக்கத்தினை விட இது குறைவாகத்தான் தோன்றும். ஒரு மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட முதற்பரீட்சையில் தோற்றும் மாணவர்களுள் 10வீதமானவர்களை தேர்ந்தெடுக்கும் போது அனைவரும் பயன் பெறுவார்கள். புலமைப்பரிசில் பரீட்சையும் அதன் நோக்கத்தை அடையும்.
2வது பரீட்சையில் 5வீதமானோரைத் தெரிவு செய்கின்ற பட்சத்தில் அவர்களுள் முடியுமானோர் பெரிய பாடசாலைகளை நாட சந்தர்ப்பமுண்டு.
இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது என எண்ணி, மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்.எனவே, இப்பரீட்சை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட வேண்டும். இப்பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என பலர் கூறுகின்றனர். எனவே, இந்த வருடத்துடனாவது இந்த கலாசாரத்தினை மாற்றி புதிய கலாசாரத்திற்கு வழியமைக்க வேண்டும். கல்விமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

No comments

Lanka Education. Powered by Blogger.