News

மாணவர் கல்வியும் பாடசாலைகளின் மீள் ஆரம்பமும்



உலகில் பிறந்த அனைவரும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதும் அவ் அனர்த்தங்களால் ஏற்படகின்ற வடுக்களினை சுமப்பதும் இயற்கையின் நியதியாகும். இவ்வாறு ஏற்படுகின்ற அனர்த்தங்கள் மனிதர்களிடத்தில் பல படிப்பினைகளை விட்டுச்சென்றுள்ளது. தற்போது உலகில் 193 எண்ணிக்கைக்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்து பல உயிர்களைக்காவு கொன்று மக்களின் நாளாந்த செயற்பாட்டை பாதித்துள்ள COVID - 19 எனப்படும் அசாதாரண சூழ்நிலையுடன்கூடிய தொற்றுநோயானது. மாணவர்களின் கல்விச்செயற்பாட்டை முழுவதுமாக பாதித்துள்ளது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பதற்கப்பால் இன்று உலகில் பெரும்பாலான நாடுகளில் மாணவர்களின் கல்விச் செயற்பாடானது முன்பு என்றும் நிகழாத வகையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
   
மாணவர்கல்வியின் தற்போதைய நிலை

உலகம் முழுவதும் ஏறத்தாள மூன்று மாதங்களுக்கு அதிகமாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதுடன் 165க்கு மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. யுனஸ்கோ அறிக்கைக்கிணங்க உலகளாவிய ரீதியில் 1.6 பில்லியன் மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. இவ் எண்ணிக்கையானது உலகம் முழுவதுமுள்ள மாணவர்களில் 87% ஆகும். அதே அறிக்கையில் குறிப்பிடுகையில் 60.2 மில்லியன் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்ளாது வீட்டில் காணப்படுவதாகவும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது. யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையின்படி 153 நாடுகள் பாடசாலைகளை நாடு முழுவதுமாகவும் 24 நாடுகள் பிரதேச ரீதியாகவும் மூடியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலக மாணவர் தொகையில் 98.6% மாணவர்களின் கல்விப்பாதிப்பை புலப்படுத்துகின்றது என இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலே கூறப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையில் ஒன்றாக காணப்படும் எமது நாட்டின் கல்வி நடவடிக்கையானது  10,012 அரச பாடசாலைகள் 736 பிரிவேனாக்கள் மற்றும் 104 தனியார் பாடசாலைகள் என அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. ஏறத்தாள 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் முறையான கல்வியைப்பெறாது பாதிக்கப்பட்டுள்ளதோடு 235,924 ஆசிரியர்கள் பாடசாலை கல்விச்செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடாமல் காணப்படுகின்றார்கள். 

உலகளாவியரீதியில் பாடசாலைகள் மூடப்பட்டதன் நிமிர்த்தம் மாணவர்களது கல்விச்செயற்பாடுகள் வீட்லிருந்து மேற்கொள்ளப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணைய வசதியுடன் தொழிநுட்ப சாதனங்களினுடாக  வலையொளி,  புலனம், பற்றியம், மின்னஞ்சல், முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களினூடாக  கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ, யுனிசெப் போன்ற உலக நிறுவனங்கள் தெலைக்கல்வி முறையில் மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை இயங்கலை மூலமாக மேற்கொள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன. யுனிசெப் நிறவனமானது மைக்றோசொப்ற் அத்துடன் கேம்பிறிட்ஜ் பல்கலைகழகத்தின் உதவியுடன் இடம்பெயர்ந்த சிறுவர்கள் அத்தடன் அகதிகளான சிறுவர்களுக்காக (Learning Passport) எனும் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. இதனூடாக பல்வேறு மாணவர்கள் பயனடையக் கூடியதாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் “Earth School”  என்ற கல்விச் செயற்பாட்டு தளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியலாளர்களின் நன்மைகருதி உருவாக்கியுள்ளது. 

இவ்வாறுபட்ட தொலைக்கல்வி முறையில் பல்வேறு சவால்களும் காணப்படுகின்றன. பொதுவான கலைத்திட்டத்தை கொண்ட நாடுகளுக்கு அப்பால் நாட்டினுள்ளே பிரதேசரீதியாக வேறுபட்ட கலைத்திட்டத்தை கொண்ட நாடுகளுக்கு பொருத்தமற்றதாகவுள்ளது. இதற்கு உதாரணமாக அமெரிக்காவை குறிப்பிடமுயும் அங்கு பிரதேசரீதியாக வேறுபட்ட கலைத்திட்ட முறைமைகள் காணப்படுகின்றன. 

இலங்கையில் காணப்படுகின்ற மாணவர்களின்; கற்றலை இக்காலத்தில் மேற்கொள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளினுடாக பல்வேறு கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குருகுலம் தெலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டம் கா.பொ.த சாதாரண தரம், கா.பொ.த உயர் தரம் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய வகுப்பு  மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும் இதில் அடங்கும். ஆனால் இங்கு வினவப்படுகின்ற விடயம் யாதெனில் இலங்கை பாடசாலை மாணவர்களில் 96% கிராமப்பற மாகாணப்பிரதேசங்களில் உள்ளவர்கள். இவர்கள் அனைவருக்கும்;  மேற்படி கல்விமுறைகள் சென்றடைவதில்  உள்ள சிக்கல் நிலையாகும். கல்வி அமைச்சு தனது ஆராய்ச்சியொன்றில்  இலங்கை மாணவர்களில் 60%  மாத்திரமே தொலைக்கல்வி மூலமாக கல்வி வசதியை பெறக்கூடியவர்களாக காணப்படுகின்றார்கள் எனக்குறிப்பிடுகின்றது. ஏனைய 40% மாணவர்கள் இம்முறையில் பயனடைய முடியாதவர்களாக காணப்படுகின்றார்கள். 

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் என்ற நிலையில் பல நாடுகள் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டபோதிலும் COVID -19 தொற்றின் அதிகரிப்பு காரணமாக அவ் முயற்சி பின்னடைவை எதிர்நோக்குகின்றது. உலகில் சில நாடுகளான சீனா, தென்கொரியா போன்றன பாடசாலைகளை ஆரம்பித்தபோதும் அங்கு பின்பு மீள மூடப்பட்டுள்ளன. எமது நாட்டிலும் பாடசாலைகளை மீள ஆரம்பித்தலில் கல்வி அமைச்சு பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதனை நாம் அறியமுயும். எவ்வாறாயினும் பாடசாலைகள் மீளதிறக்கப்படுகின்றபோது மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் அவசியமாகும். நீண்ட இடைவெளியின் பின்பு மாணவர்கள் கல்விச்செயற்பாட்டை மேற்கொள்ள தயாராகும்போது அவர்களின் தயார்நிலையை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு பொருத்தமான வழிகாட்டல் ஆலோசனையுடன் கற்பித்தல் அத்துடன் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.  

ஆகவே COVID -19  தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் நிலைகுலைந்துபோயுள்ள மாணவர் கல்வியினை மீளக்கட்டியெழுப்புவதில் அனைவரினதும் வகிபங்கு அவசியமானதாகும். ஓர் நாட்டின் வளர்ச்சியில் கல்வியின் வகிபங்கு அவசியமானது என்பதற்கிணங்க வீழ்ச்சியடைந்துள்ள கல்வியினை கட்டியெழுப்புவதனூடாக   நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை மாற்றியமைக்கமுயும் என்பது திண்ணம்.  

ர.விவேகானந்தராசா (B.Ed(EUSL), HNDE (SLIATE), DiTech(ESOFT), M.Phil-PhD (Reading - University of Colombo)

விரிவுரையாளர் 
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

No comments

Lanka Education. Powered by Blogger.