News

பாடசாலை நடவடிக்கைகள் 04 கட்டங்களாக ஆரம்பம் ! A/L பரீட்சை செப்டெம்பர் 7 தேதி, புலமைப் பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13 தேதி



ஜூன் 29 - ஆசிரியர்கள் & அதிபர்கள்
ஜூலை 06- தரம் 05,11, 13
ஜூலை 20 - தரம் 10 & 12
ஜூலை 27 - தரம் 3,4,6,7,8,9
தரம் 01,02 2 பற்றி இன்னும் முடிவில்லை

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் (ஜூன்) 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் மூன்று மாதங்கள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. தற்போது நாட்டில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களாக பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் டளஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை எதிர்வரும் 29ஆம் திகதி நிறைவடைவதுடன் அன்றைய தினம் முதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அன்று பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆளணியினர் மாத்திரம் பாடசாலைக்கு சமுகமளிப்பார்கள் என்றும் மாணவர்களுக்காக ஜூலை மாதம் 6ஆம் திகதியே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரம், சாதாரண தரம் அத்துடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே முதலில் ஆரம்பிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜூலை மாதம் 20ஆம் திகதி மூன்றாம் கட்டமாக தரம் 10 மற்றும் தரம் 12 வகுப்பு மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு தவிர்ந்த 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்களுக்காக ஜூலை 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தேதி தீர்மானிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டளஸ் தெரிவித்தார்.

10, 11, 12, 13 ஆம் வகுப்புகளுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறுவதுடன் 03 மற்றும் 04ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முற்பகல் 11. 30 மணி வரையும் ஐந்தாம் வகுப்புக்கு நண்பகல் 12 மணி வரையிலும் வகுப்புக்கள் நடைபெறவுள்ளதாகவும் 06, 07, 08, 09ஆம் தரங்களுக்கு வழமை போன்று பிற்பகல் 1.30 மணி வரையும் கல்வி நடவடிக்கைகள் நடைபெறுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வார இறுதி நாட்களில் பாடசாலைகளை நடத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அவ்வாறு நாம் செயற்படப்போவதில்லை. என்றாலும் பிற்பகல் 3.30 மணி வரை குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்காக மேலதிக வகுப்புகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம். நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களும் 312 தொகுதி காரியாலயங்களும் உள்ளன.

மாகாண ஆளுநர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களென அனைவருடனும் மீண்டும் பாடசாலையை திறப்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். அதன் பிரதிபலனாகவே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதேவேளை நாட்டிலுள்ள கத்தோலிக்க பாடசாலைகளையும் அதே தினத்தில் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக கத்தோலிக்க பாடசாலைகளுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Lanka Education. Powered by Blogger.