News

இரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம்

இரண்டு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான சந்தர்ப்பம் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுக்கு கிட்டியுள்ளது.
சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய இதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ளார்.
பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தினர் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களும் சுமார் 5 மாதங்களாக கல்வி நடவடிக்கையில் ஈடுபடவில்லை என இதன்போது தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு குறித்த பரீட்சை தினங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பரிசீலிக்குமாறு தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து பரீட்சை தினங்கள் குறித்த தீர்மானத்தை மீளவும் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே, வினாப்பத்திரங்களை தயாரிக்கும் போது மாணவர்கள் தெரிவுசெய்து விடையளிக்கும் வகையில் அதிக வினாக்களை உள்ளடக்குவது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி, பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments

Lanka Education. Powered by Blogger.