News

அவ்வை-அதியமான் அசைவூட்ட குறும் படம்

அவ்வை - அதியமான்.. பேரன்பும், பெருநட்பும்..கடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்ற ஊரில் வாழ்ந்திருந்து பின்னர் சேர நாட்டில் குடி ஏறியவனாக இருத்தல் வேண்டும். அதனால் அதிகமான் எனவும் வழங்கப்பட்டான் எனவும் கூறுவர். இம்மன்னனின் தலைநகரம் 'தகடூர்'. இது தற்போது தர்மபுரி என வழங்கப்படுகின்றது. ஒளவையார் இம்மன்னனைப் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் மூலம் இவனது கோடை, வீரம் வள்ளல் தன்மையினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பல வரலாற்றுச் செய்தியினையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை தொண்டைமான் என்னும் மன்னன் அதியனுடன் போருக்குத் தயாரானான். அதியன் அமைதியை விரும்பினான். அதியனுக்காக ஒளவையார் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கலங்களைக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டான். அவனது கர்வத்தை ஒடுக்கவும் அதியனின் வீரத்தைத் தெரிவிக்கவும் பாடல் ஒன்றைப் பாடினார் ஒளவையார்.

'
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகரவ்வே, அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ
'
இப்பாடல் மூலமாக தொண்டைமானின் படைக் கலங்கள் போர்க்களத்தைப் பாராததால் புதியதாக நெய்யணிந்து மாலை சூட்டிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதியனின் படைக் கலங்களோ எப்போதும் போர்க் களத்திலேயே இருந்து பகைவரைக் குத்திக் கிழிப்பதால் முனை முரிந்து கொல்லன் உலைக் களத்திலே கிடக்கின்றன.' என்று பாடியதைக் கேட்ட தொண்டைமான், அடிக்கடி போர் புரிந்து அதிக அனுபவங்களை கொண்ட அதியமானையும் அவனது படைகளையும் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அவ்வையின் பாடல் சொன்ன உட்கருத்தை புரிந்து கொண்டு போரை நிறுத்தி சமாதானம் செய்து கொண்டான்..

மற்றொருமுறை அதியனுக்குத் திரை செலுத்தாதவரைத் தேடிச் சென்று அதியனின் வாள் திறம் வேலின் உறுதி யானைப் படையின் வீரம் பற்றி எடுத்துக் கூறி அவர்களைத் திறை செலுத்தும்படி செய்தார். பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு வென்ற செய்தியைப் புகழ்ந்து பாடி மகிழ்ந்தார். இவ்வாறு அதியன் மீது கொண்ட அன்பால் அவன் மீது பல பாடல்களைப் பாடி மகிழ்ந்த ஒளவையார் ஒரு முறை அதியனைக் காணச் சென்றார். புலவர்களின் வழக்கப்படி பரிசிலை நாடிச் சென்றார். பல நாட்கள் அதியனின் அரண்மனையில் விருந்தினராய் இருந்தார்.

அதியன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான். ஒளவையார் மீது கொண்ட பேரன்பால் பரிசில் கொடுத்து விட்டால் அவர் தன்னைப் பிரிந்து சென்று விடுவார் என்று எண்ணியே காலம் தாழ்த்தினான். ஒளவையார் 'ஒரு நாள் பழகினாலும் பலநாள் பழகினாலும் முதல் நாள் போலவே என்றும் அன்பு செலுத்துபவன் அதியன். அவன் பரிசில் தராவிடினும் யானையின் கொம்பிடை வைத்த உணவு எப்படி யானைக்குத் தப்பாதோ அதுபோலத் தப்பாமல் அவனது பரிசில் நமக்குக் கிட்டும். மனமே வருந்தாதே. அவன் வாழ்க' என வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார். இதனைக் கேள்வியுற்ற அதியன் ஓடோடி வந்து ஒளவையாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பரிசிலைக் கொடுத்தான். இப்பாடல் மூலமாக புலவர்கள் ஒரு இடத்தில் தங்காதவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒளவையார் மீது அதியன் கொண்டுள்ள அன்பையும் இந்நிகழ்ச்சி காட்டுகிறது. அதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்ற நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.

ஆதலால் அக்கொடையை நினைத்து ஒளவையார் நீ சிவபெருமானைப் போல வாழ்வாயாக என வாழ்த்தினார். தன்னைப் போல மன்னர் பலர் தோன்றுவர். ஆனால் ஒளவையாரைப் போலப் புலவர்கள் சிலரே தோன்றுவர் எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒளவையாருக்கு இக்கனியைக் கொடுத்தான் அதியன். அத்துடன் அக்கனியின் சிறப்புக்களை மறைத்து ஒளவையார் அக்கனியினை உண்ட பிறகே அதன் சிறப்புக்களை பற்றிக் கூறினான். எனவே அவனது அன்புள்ளம் புலனாகிறது. அதியனின் வீரத்தை முதலில் கூறிப் பின் வாழ்த்துகிறார். அப்பாடல்,

'
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொனனிலைப்
பெருமழை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.
'

என்ற பாடல் அதியமான் ஒளவையார் மீது கொண்ட நட்பையும் அன்பையும் புலப்படுத்துகிறது.

-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Tags:- Avvaiyar, Athiyaman, Lanka Educations, Learn Easy, lkedu, Tamil

No comments

Lanka Education. Powered by Blogger.