News

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!




 இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை, இன்று  ஆரம்பமாகியுள்ளது.

உயர்தர பரீட்சை, இரண்டாயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் 03 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிலையங்களின் இணைப்புக்காக மேலதிக இணைப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் இம்முறை பரீட்சை இடம்பெறுவதனால், பரீட்சை மத்திய நிலையங்களுக்கான சுகாதார வசதிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து பரீட்சை மத்திய நிலைய சூழலில் கிருமி நீக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் என்பவற்றுக்காக மேலதிக இணைப்பதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்துடனும் தொடர்புடைய பாடசாலையின் அதிபர்கள், உப அதிபர்கள் அல்லது சிரேஷ்ட ஆசிரியர்கள் மேலதிக இணைப்பதிகாரியாக செயற்படுவார்களென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்குமான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களூடாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள், அவர்களால் வழங்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதுவரை பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவர்கள், தமக்கான அனுமதிப்பத்திரங்களை தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை உயர்தர பரீட்சையின் போது சுகாதார வழிமுறைகளை உரியவாறு பின்பற்றுமாறு பரீட்சார்த்திகளிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பரீட்சார்த்திகள், தமது பரீட்சை அனுமதி பத்திரத்தை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டம், வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்படுவோருக்கு 06 மாதங்கள் சிறை தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான சட்ட திருத்தங்களும் குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட விடயங்கள், குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 


No comments

Lanka Education. Powered by Blogger.