News

பொதுப்பரீட்சைகளை நடாத்துவதில் உள்ள சவால்களும் மாணவர்களின் எதிர்காலமும்


ஆற்றலும் ஆளுமையும் கொண்ட சமூக உருவாக்கத்தில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு  பாடசாலையினதும்  வினைதிறனும் விளைதிறனும்  கொண்ட தன்மையினையும் தனித்துவத்தினையும் உலகறியச்செய்வதில் பொதுப்பரீட்சைகளுக்கு தனியிடமுண்டு. ஏனெனின் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளுடன் பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்தே பாடசாலைஙளின் தரம் மதிப்பிடப்படுகிறது.. அத்தோடு மாணவர்கள் அரச சலுகைகளப் பெறல், உயர் தரத்திற்குதகுதி பெறல், பல்கலைககழக அனுமதி, எதிர்கால தொழிற்துறைகளை திட்டமிடல் மற்றும் தெரிவு  செய்தல் போன்றவற்றிற்கு பொதுப்பரீட்சைகள் அடித்தளமாக அமையும்  .

ஏலவே பரீட்சைத் திணைக்களமானது; 
Grade 05 Scholarship - 02.08.2020
G.C.E.A/L - 04.08.2020 - 28.08.2020
G.C.E.O/L - 01.12.2020_10.12.2020 வரையும் பொதுப்பரீட்சைகளை நடாத்த திட்டமிட்டிருந்தது. எனினும் 193 நாடுகளுக்கு பரவி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்ற Covid-19 தாக்கம் காரணமாக பொதுப்பரீட்சைகளை நடாத்துவதில் பலத்த சவால்களை உருவாகியுள்ளது. இச்சவால்களை மாணவர்கள் ,ஆசிரியர்கள், அரசு மற்றும் பரீட்சைத்திணைக்களம் என்பன நேரடியாகவே  எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

COVID-19 தாக்கத்தினால் உருவான நெருக்கடிகள் காரணமாக  மாணவர்கள் பொருளாதார, சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பிற்குட்பட்டுள்ளதோடு கற்றலை மேற்கொள்வதில் அசாதாரண நிலையை எதிர் நோக்கியுள்ளனர்.

UNESO  அறிக்கையின் படி உலகலாவிய ரீதியில்  1.6 billion மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளதோடு 165 பாடசாலைகள்  முற்றாக மூடப்பட்டுள்ளன. Save the Children இன் அறிக்கையின்படி 96 இலட்சம் மாணவர்கள் மீண்டும் பாடசாலை செல்லவோ பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவோ தயார் நிலையில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இம்முன்று பொதுப்பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் கட்டிளமைப்பருவத்திற்குட்பட்டவர்களாக காணப்படுகின்றமையினால் உளத்தாக்கத்திற்குட்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதே முக்கிய காரணமாகும்.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு அதிகமான பாடசாலை விடுமுறையானது மாணவர்களிடம் பாடசாலை தொடர்பான எண்ணக்கருவை பெரிதும் மறக்கடிக்கச் செய்துள்ளமையும் பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமையினாலும் பரீட்சை தொடர்பான மாணவர் மனவெழுச்சியில் எதிர்மனப்பாங்கினைத் தோற்றுவித்துள்ளது..

அரசு பாடங்களை Online Classes (Zoom), தொலைக்காட்சியினூடாக (NethraTV, KalviTV ) ஊடாக நடாத்தினாலும் அது  அனைத்து மாணவர்களையும் சென்றடைகின்றதா என்பது ஐயப்பாடுடையதே. ஏனெனின் இவற்றினூடான கற்பித்தல் 60% மாணவர்களையே சென்றடைவதாக  கல்வி அமைச்சின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது..

அத்தோடு விடுதிகளில் தங்கிப்படிக்கும், தூரப்பிரதேசங்களுக்கு பரீட்சை மண்டபத்திற்கு செல்லும்  மாணவர்கள் போக்குவரத்துசார் மற்றும் சுகாதாரம்சார் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதோடு மாணவர்கள் மத்தியில் பதகளிப்பு நிலையை தோற்றுவிக்க வாய்ப்புக்களும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகிறது.

மேலும் முதலாம்  தவணைப்பரீட்சைகள் கூட நிறைவு பெறாத நிலையில் தொடர் விடுமுறையை அனுபவித்து வரும் மாணவர்கள் அனைவரையும் Oline Classes மூலமான கற்றல் சென்றடையாத நிலையில் பாடத்திட்டத்தினை முழுதளாவி பரீட்சை வினாத்தாள்களை தயாரிப்பதிலும் பரீட்சை நடாத்துவதும் மதிப்பீடுகளை மேற்க்கொள்வதும் எந்தளவு பொருத்தப்பாடுடையது என்பது வினாவிற்குட்பட்டதே.

அத்துடன் பரீட்சை மண்டபங்களில் சமூக இடைவெளி பேணல், மேற்பார்வை செய்தல் என்பன பரீட்சையை நடாத்துவதில் முக்கியமானவை எனினும் மாணவர்கள் சரியான வகையில் சமூக இடைவெளியைப் பேணுவார்களா என்பதும் வேறுபட்ட பிரதேசங்களில் இருந்து பரீட்சை மேற்பார்வை மற்றும் மதிப்பீடுகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அனுப்புவார்களா என்பதும் விடை இல்லா வினாவாகவே அமைகிறது.

பரீட்சை நடைபெறும் மண்டபவங்களில் பரீட்சை வினாத்தாள்கள் கையுறை, முகக்கவசம் அணிந்த வண்ணம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும் மாணவர்கள் கையுறைகளையும் முகக்கவசங்களையும் அணிந்த வண்ணம் பரீட்சையை எழுதுதென்பது நேரமுகாமையை பேணமுடியாமல் போவதோடு அசௌகரித்தினையும் அச்சத்தினையும் பதகளிப்பினையும் மாணவர்களும் மேற்பார்வையாளர்களும் எதிர்கொள்ள நேரிடும் .

வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை தொடுகை மூலமே எழுத வேண்டியும் மேற்பார்வையாளர்களும் மாணவர்களும் இடையில் பரிமாற வேண்டிய நிலையும் காணப்படுவதால்      நோய்தொற்று, வைரஸ் தாக்கம் ஏற்படலாம்.

பொதுப்பரீட்சையை நடாத்துவதில் காணப்படும் மற்றுமொரு சவாலாக பரீட்சைத்திணைக்களமானது எப்போது பரீட்சையை நடாத்துவது? எவ்வாறு நேர அட்டவண தயாரிப்பது என்ற விடயங்களில் திணறிக்கொண்டிருக்கிறது.

ஏனெனின் COVID-19 இன் இரண்டாவது அலை தொடர்பான அச்சத்துடன் தொற்றுக்குள்ளாகி குணமடையாமல் இதுவரை  2686 பேர் வரை காணப்படுகிறமையும் எப்போது இந்நிலை கட்டுப்பாட்டிற்குள் வருமென்ற நிலையறியாமலும் குறிப்பாக உயர்தர  மாணவர்களால் ஒக்டோபர் மாதத்தில் பரீட்சையை நடாத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் பரீட்சைக்கான நேர அட்டவணை தயாரிப்பிலும் பரீட்சையை திட்டமிட்டவாறு நடாத்துவதற்கும் தடையாக அமைகிறது.

அத்துடன்  மேற்பார்வைக்கான ஆசிரிய வளப்பங்கீடு  அவர்களின் போக்குவரத்து தங்குமிடவசதிகள் போன்றவற்றினை ஒழுங்கு செய்வதில் உள்ள சிக்கல் தன்மையுடன் காணப்பபட மாணவர்கள் , ஆசிரியர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்கென  அரசு தனியான சுகாதாரப்பிரிவினரையும் சுகாதாரமேம்பாட்டு உத்திகளையும் கையாளவும் நிறுவவும் வேண்டியுள்ளதுடன் அதற்கான செலவினை தற்போது அரசு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில்  நடைமுறைப்படுத்துவதென்பது  ஐயத்திற்கிடமானவொன்றாகவே காணப்படுகிறது

2019 இல் G.C.E (O/L) பரீட்சையில்  73.84% ஆனோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றதோடு  G.C.E (A/L) இல் 181,126 பேர் பல்கலைக்கழத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை பரீட்சைபெறுபேறுகளில் மாற்றம் நிகழுமென கல்வியலாளர்களால் எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வாறான சவால்களுக்கு  மத்தியில் மாணவர்கள்  சிக்குண்டு தவிப்பதனால் இவ்வாறான சமூக, பொருளாதார, பாதுகாப்பு தொடர்பான தாக்கங்கள் யாவும், ஆசிரியர் மாணவர் உளத்தொலைவு ஏற்படல், பதகளிப்பு, பரீட்சையில் வெறுப்பு, கல்வியிலும் எதிர்கால இலட்சியங்களிலும் நம்பிக்கை இழப்பு, பரீட்சை  இடைவிலகல்மனஉளைச்சல், விரக்தி, தற்கொலை முயற்சி போன்றவற்றிற்கும்  வழிவகுக்கும். இவ்வாறான நிலையில் பல கனவுகளுடன் காணப்படும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே பரீட்சைக்கு மாணவர்களை  உற்சாகப்படுத்துவதலும் தொடர் மீள வலியுறுத்தலை வழங்கலும், ஆசிரியர்கள் மற்றும் விடுமுறையில் உள்ள பல்கலைக்கழக, கல்வியற்கல்லூரி  மாணவர்களையும் இணைத்து மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறையைப் பேணி கற்பித்தலை மேற்கொள்ளல், உளவள ஆலோசகர்களைக் கொண்டு  ஆலோசனை வழிகாட்டலை வழங்கல், இடர்முகாமைத்துவ பயிற்சிகளை வழங்கி மன அழுத்தத்தைக் குறைத்தல்,
பெற்றோர்கள், மாணவர்களுக்கு பரீட்சை மற்றும் பரீட்சைக்கு தயாரதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை Online மூலம் நடாத்தல், பரீட்சை நடாத்துவது தொடர்பான  மாணவர்களின் கருத்துக்களைப் பெற்று பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கிணங்க தீர்மானித்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். குறிப்பாக பொதுப்பரீட்சைகளை  நடாத்துவது தொடர்பாக அரசினால் நடைமுறைப்படுத்த எத்தனிக்கப்படும் முடிவுகள் யாவும் மாணவர்களின் உளநிலையையும் எதிர்காலத்தினையும்  கருத்தில் கொண்டு எடுக்கப்படல் காலத்தின் தேவையாகும்.

Miss. Shareefa Musthafa
Department of Education & Child Care
4th Year
Eastern University of Sri Lanka

Tags:- Schools, College, Students, Grade 5, A/L, O/L, Corona, Exams, Prepare, Posrponed, Future, Lanka Educations,Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.