News

கொரோனா கால கல்வி ஆலோசனைகள்

 


நௌபீர் ஆதம் லெவ்வை

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் சீனாவில் கோவிட்- 19 வைரஸின் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கொரோனா நோய் காரணமாக சீனாவில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பலியானதுடன் பல நாடுகளுக்கும் அது பரவத் தொடங்கியது.

2020ஆம் ஆண்டு உலகின் வைரஸ் தொற்று ஆண்டாகவே பதிவாகியுள்ளது. இது பல வகையான தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் மாணவர்களின் கல்வி விடயத்தில் பல சிக்கலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய் காரணமாக மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் கல்வி நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது திண்டாடுகிறார்கள்.

இந்நோயால் சமூக இடைவெளியைப் (social distance) பேண வேண்டும் என்பதால் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் போதனைகள் (Tuition) என எல்லாமே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு சமுகமளிக்க முடியாத மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளிலிருந்து வீட்டில் முடங்கிப் போக வேண்டி உள்ளது. இதனால் வேறு கவனக் கலைப்பானிலே ஈடுபடவும் கற்ற கல்வியை மறந்து போகவும்கூட நிலைமைகள் அதிகமாகவே உள்ளதாக கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அத்துடன் கொரோனா காரணமாக ஊரடங்கு ஊரினை, நகரத்தை முற்றாக மூடிவிடல் (lockdown) ஆகிய காரணிகளால் மாணவர் நிலை மேலும் மோசமடைவதை அவதானிக்கலாம்.

இந்நோய் பல்கலைக்கழகம் முதல் முழு மாணவர் சமூகத்தையுமே பாதித்தாலும் குறித்த வருடத்தின் அரச பொதுப் பரீட்சைகளான க.பொ.த. (உ/த), க.பொ.த. (சா/த), தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்களை எந்த வகையில் பாதிக்கின்றது என நோக்குவது சிறப்பாக அமையும்.

தரம் ஐந்து மாணவர்

இவர்கள் ஆரம்பப் பிரிவுக்குரிய மாணவர்கள் என்பதனால் அதிகம் ஆசிரியர்களின் வழிகாட்டலில் தங்கி இருக்கிறார்கள். இவர்களால் சுய கற்றல், சுய மதிப்பீடு (self assessment), அக மதிப்பீடு (internal assessment) என்பன வீட்டிலிருந்து கொண்டு சாத்தியமில்லாது போய் விடும். அத்துடன் இவர்கள் தோற்றியுள்ள பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சை ஆதலால் இவர்கள் பெருமளவான மாதிரி, கடந்த கால வினாக்களை உள்ளடக்கிய பயிற்சிகளைச் சந்திக்க வேண்டும். அதன் மூலம் மாணவர் மதிப்பீடுகளை (students evaluation) ஆசிரியர்களால் மேற்கொள்ள வேண்டும். இவை எதுவுமே கொரோனாவால் சாத்தியமாகாது போய் விட்டது. அத்துடன் அதிக காலம் வீட்டிலிருப்பதால் இவர்களின் கற்றல் இடைவெளி அதிகமாக ஏற்பட்டு விடுகிறது. இது மீளவும் கல்வியைத் தொடங்குவதைப் பாதிக்கின்றன. சில மாணவர்கள் தொடர்ந்தும் வீட்டிலே இருக்கவே விரும்புவார்கள் என்பதால் பாடசாலைக்கே வராமல் இடை விலகல் (dropout) அதிகரிக்கலாம். பெற்றோரும் ஓரளவு கவனத்தைக் குறைக்கும்போது மாணவர்கள் சகபாடிகளோடு சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபட்டு கற்றல் செயற்பாட்டை முற்றாகவே மறந்து போவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன. இவர்கள் சிறுவர்கள் என்பதால் கணனிவழிக் கல்வியையோ சமூக ஊடகங்கள் (social media) வாயிலான கற்பித்தற் செயற்பாடுகளிலோ கலந்து கொள்வதும் கடினமான விடயமாகும்.

க.பொ.த. (சா/), (/மாணவர்களும் கொரோனாவின் தாக்கமும்


இவர்கள் இம்முறை ஒன்பது பாடங்களைக் கொண்ட பொதுப் பரீட்சைக்கு முகம் கொடுக்க உள்ள ஒரு பிரிவினராகும். இவர்களுக்கு ஆறு பாடங்கள் கட்டாயமானதாகவும் மீதி மூன்றும் விருப்பத் தெரிவாக (optional) உள்ளன.

இவர்களின் க.பொ.த. (சா/த) பெறுபேற்றை வைத்தே உயர் தரத்தில் உரிய பிரிவுகளைத் தெரிவு செய்து கற்க முடியும் என்பதாலும், எதிர் காலத்திலே சட்டம், பொறியியல் போன்ற வேறு தொழிற்றுறைகளைக் கற்பதற்கான தேவையை நிறைவு செய்வதற்கான ஆங்கிலம், மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் சித்தி பெற வேண்டும் என்பதும் மாணவர்களின் கட்டாயமான விடயமாக உள்ளது.

இவர்களும் வீட்டிலே முடங்கிக் கிடப்பதால் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இவர்கள் கட்டிளமைப் பருவத்தினர் என்பதால் பெரும் சவாலைப் பெற்றோர் எதிர்நோக்குகின்றனர். நவீன தொழிநுட்ப கணனி, தொடுகை விசை கொண்ட கையடக்கத் தொலைபேசி என்பன இந்த வயதான மாணவர்களைப் பெரிதும் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. குறித்த கற்றல் இடைவெளியைக் கருத்திற் கொண்ட ஒரு சில ஆசிரியர்களும் சமூக நலன் விரும்பிகளும் சமூக ஊடகங்கள் வாயிலான கற்பித்தல் நேரடி ஒளிபரப்புக்களை மேற்கொண்டு வருகிறார்கள். சில மாணவர்கள் இந்த தொழிநுட்ப வசதிகளில்லாமல் அவதிப்படுவதுடன், ஒரு சில மாணவர்கள் வழி தவறிப் போகவும் இதன் மூலம் உருவாக்கப்பட்ட வட்சப், முகநூல் குழுமங்களூடாக மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றும் முகநூல் முகவரிகளைப் பெற்றும் தவறான செயற்பாடுகளில் ஈடுவதையும் அறிய முடிகிறது.

சிங்கள ஊடகங்கள் மேற்கொள்ளும் கற்பித்தற் செயற்பாடுகள் சிறப்பாகவும் ஓரளவு அதிகமாகவும் சிறந்த திட்டமிடலோடும் இருந்தாலும் தமிழ் மொழியில் இவ்வாறான கற்பித்தற் செயற்பாடுகள் ஒரு சில வானொலிகளில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அவை எந்த திட்டமிடலும் இல்லாமலும் மாணவர்களின் பாடங்கள் ஒழுங்கான வரிசைக் கிரமமானதாக  இல்லாமலும் “ஏனோதானோ” என்ற அமைப்பில் செயற்படுவதைக் காண முடிகிறது. சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வந்து இவ்வகை வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும் ஒரு சிலர் தொலைக்காட்சியிலேயே கற்பித்தல் என்ற ஆசையிலே வந்து மாணவர் நேரத்தை பெறுமதி அற்றதாக ஆக்குவதையும் காண முடிகிறது.

சிலர் பொருத்தமான பதவியிலே இருந்தாலும் அவர்களின் கற்பித்தல் முறைமை வெற்றிகரமாக இல்லை. அத்துடன் கொரோனா இடர் (critical period) நேரத்தில் மாணவர் நலனை மட்டுமே கருத வேண்டியதுடன், அவர்களின் பெறுபேற்றை எவ்வாறு உயர்த்த முடியும் என்ற முயற்சிகளே நடைபெற வேண்டும். இந்த தருணத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முறைமைகள், பெற்றோர்- பிள்ளை வளர்ப்பு என்ற விடயங்களைப் பேச வேண்டிய தேவையை விடவும் மாணவருக்கான பரீட்சை, கற்றல், பாடத் திட்ட விடயங்களை (subjects) முடிப்பதே சிறப்பாகும். ஆனால், சிலர் இதைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. நேரமறிந்து செயற்படுத்துவதற்கு மாணவர் விழிப்புணர்வு (students mobility) மட்டுமே சிறப்பானது.

சில பாடசாலைகளில் புதிய வட்ஸ்அப் (WhatsApp) குழுமங்கள் உருவாக்கப்பட்டும் கற்பித்தல், பயிற்சி வினாக்களை அனுப்புதல் என்பன நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக இதைச் செய்கின்றன. அது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். என்றாலும் இதை ஒரு ஒழுங்கு முறையிலோ, பாடங்களைத் திட்டமிட்டோ செய்வதாக இல்லை. இங்கு எத்தனை மாணவர்கள் இதைப் பகிர்ந்து கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளார்கள் என்ற சிக்கல் உள்ளதால் இவற்றைப் பாடசாலைகளோ வலயக் காரியாலயங்களோ உத்தியோகபூர்வமக செய்து கொள்ள முடியாதுள்ளது.

கொரோனா கால கல்வி ஆலோசனைகள்


எமக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை உலகில் எப்போதுமே ஏற்பட்டதொன்றல்ல. மத ஆலையங்களெல்லாம் பூட்டிக் கிடக்கின்றன. பாதைகளெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகள், மக்கள் ஒன்றுகூடல்கள் என எதுவுமே இல்லாத உலகை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இது ஒரு (இறைவனின்) இயற்கையின் சீற்றமே. நாம் இவற்றைத் தாங்கியே கடந்து செல்ல வேண்டும். நமக்கும் மற்றவருக்கும் பாதிப்பு வராது வாழ வேண்டிய நிலை பற்றி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கான தர்க்க ரீதியான மனோநிலையை (abstract thinking) மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்த வேண்டும்.

கல்வியிலே நேரடியாக மாணவர்கள் ஈடுபட்டாலும் பரீட்சையை அவர்களே எதிர்கொண்டாலும் பலரும் சமூகத்திலிருந்து ஊக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக பெற்றோரின் பொறுப்புக்கள் அதிகரிக்க வேண்டும். எதிர்கொள்ள உள்ள பரீட்சைக்கான சிறந்த பாடத் திட்ட (syllabus) வழிகாட்டியாக ஆசிரியர்கள், பெற்றோர், சமூக நிறுவனங்கள் என எல்லோருமே கரிசனை கொள்ள வேண்டும். தேவையற்ற விடயங்களைத் தவிர்ப்பதே நல்லது.

குறிப்பாக பொதுப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களைச் சிறப்பாக வழிநடத்த வேண்டும். எந்த இடர் வந்து போனாலும் பரீட்சை நம்மை எதிர்கொள்ளும். அதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏதோ அடிப்படையில் நாம் செய்தே ஆக வேண்டும். அதற்கான சிறந்த தயார்படுத்தல்களைச் செய்து கொடுப்பது சமூகத்தின் தலையாய பொறுப்பாகும். ஊர், பிரதேசம், தேசிய மட்டம் என்ற அடிப்படையிலே இவ்வகைத் தயார்படுத்தலைச் செய்ய முன்வர வேண்டும். இவ்வகை இணைய, சமூக வலைத்தளங்களைப் பாவிப்போருக் கிடையிலும் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பது நல்லதே. குறித்த ஒரே பாடத்தைப் (subject) பலரும் கற்பிக்காமல், பகிர்ந்து செய்து இலகுவாக வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்த முடியும். இவற்றில் எல்லோரும் அக்கறை கொள்வோம். வெற்றி பெறுவோம். மீழ எழுவோம்.

Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.